அம்பாலா
தானும் தனது சகோதரியும் நேபாளிகள் போல் தோற்றம் அளித்ததால் தங்களுக்கு பாஸ்போர்ட் அளிக்க அதிகாரி மறுத்ததாகஅரியானாவைச் சேர்ந்த பெண் கூறி உள்ளார்.
அரியானா மாநிலம் அம்பாலாவை சேர்ந்தவர் பகத் பகதூர். இவருக்கு சந்தோஷ் மற்றும் ஹெலெனா என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க சண்டிகர் அலுவலகத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு அந்த சகோதரிகள் இருவரும் பார்க்க நேபாளி போல் தோற்றம் அளிப்பதாகக் கூறிய அதிகாரி பாஸ்போர்ட் வழங்க மறுத்துள்ளார்.
அத்துடன் அவர்கள் இந்தியர்கள் என்பதற்கு அத்தாட்சியைக் கேட்டுள்ளார். இது குறித்து அந்த சகோதரிகளில் ஒருவர் புகார் அளித்துள்ளார். அத்துடன் இந்த விவகாரத்தை மாநில அமைச்சர் அனில் விஜ் என்பவரிடம் எடுத்துச் சென்றுள்ளனர். அவருடைய பரிந்துரையின் பேரில் அவர்களுடைய விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து அம்பாலா துணை ஆணையர் அசோக் சர்மா, “நேபாளி போல் தோற்றமளித்ததால் அந்த சகோதரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்க சண்டிகர் அலுவலகம் மறுத்துள்ளது. இது குறித்து விவரம் கேட்டு அந்த விண்ணப்பம் என்னிடம் அனுப்பப்பட்டது. நான் விசாரித்து அந்த இருவரும் இந்தியர் என்பதைத் தெரிவித்த பிறகு விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அந்த இருவரையும் பாஸ்போர்ட் அலுவலர் நேர்முக விசாரணைக்கு அழைத்து ஆவணச் சோதனைகளை முடித்துள்ளார். விரைவில் இவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட உள்ளது. நேபாளிகள் எனத் தவறாக முடிவு செய்த அதிகாரி மீது விசாரணை நடத்தப்பட உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.