புதுடெல்லி: கடந்த டிசம்பர் மாதத்திற்கான ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.03 லட்சம் கோடிகள் என்பதாக அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வரியை அமலுக்கு கொண்டுவந்தது முதல், சிறுதொழில் செய்வோர் உள்ளிட்ட பலகோடி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தற்போது, கடந்த டிசம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் ரூ.1,03,184 கோடிகள் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகையில் மத்திய ஜிஎஸ்டி ரூ.19,962 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.26,792 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.48,099 கோடியாகவும், செஸ் வரி ரூ.8,331 கோடியாகவும் உள்ளதாக விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2019ம் ஆண்டின் டிசம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் என்பது 2018ம் ஆண்டின் டிசம்பர் மாத வருவாயுடன் ஒப்பிடுகையில் 16% அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய தொடர்ச்சியான இரண்டு மாதங்களிலும் வசூலான ஜிஎஸ்டி தொகை ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.