சென்னை

டாஸ்மாக் கடைகளில் ஆங்கில புத்தாண்டு விற்பனை இலக்காக ரூ.250 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாஸ்மாக் என அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் அரசு மாநிலம் முழுவதும் மது வகைகளை விற்பனை செய்து வருகிறது.  தற்போது பள்ளி மாணவர்கள் முதல் முதியோர் வரை வயது வித்தியாசமின்றி மது அருந்தி வருகின்றனர்.  எனவே டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.  ஆயினும் அரசு அதை கவனத்தில் கொள்ளாமல் உள்ளது.

புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் குடிப் பிரியர்களின் கூட்டம் இந்த கடைகளில் அலைமோதுவது வழக்கமாகும்.  அதையொட்டி டாஸ்மாக் இது போன்ற தினங்களில் விற்பனை இலக்கு நிர்ணயித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.  இதற்கு மக்களின் எதிர்ப்பு எழுந்துள்ள போதும் அரசு அது பற்றி கவலை கொள்ளாமல் உள்ளது.

தற்போது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டாஸ்மாக் இன்றும் நாளையும் விற்பனை இலக்காக ரூ.250 கோடி நிர்ணயம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.  அத்துடன் டாஸ்மாக் நடத்தி வரும் சென்னையில் உள்ள 31 எலைட் மதுக்கடைகளில் ஊழியர்களுக்குக் கோட் சூட் எனச் சீருடை மாற்றப்பட உள்ளது.  விரைவில் மாநிலத்தில் உள்ள அனைத்து எலைட் மதுக்கடைகளிலும் இதே சீருடை வழங்கப்பட உள்ளது.