புதுடெல்லி: நாட்டின் வனப்பகுதி பரப்பு 5000 சதுர கி.மீ. அளவிற்கு அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
இதன்மூலம், இந்தியா கூடுதலாக 250-300 கோடி டன் அளவிற்கான கார்பன் சின்க் எனப்படும் கரிம வள உருவாக்கத்திற்கு துணைபுரிந்துள்ளதாகவும், இது பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு ஏற்ப உள்ளதாகவும் அவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, “கடந்த 2017ம் ஆண்டு காணப்பட்டதைவிட, இந்த 2019ம் ஆண்டில் வனம் மற்றும் மரங்களின் பரப்பானது 5188 சதுர கி.மீ அதிகரித்துள்ளது. அதாவது, வனத்தின் பரப்பு 3976 சதுர கி.மீ. மரங்களின் பரப்பு 1212 சதுர கி.மீ.
ஒட்டுமொத்த நிலவரம் இப்படியிருக்க, வடகிழக்கு பிராந்தியத்தில் வனப்பகுதி 765 சதுர கி.மீ குறைந்துள்ளது. அஸ்ஸாம் மற்றும் திரிபுரா மாநிலங்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.
வனப்பகுதி அதிகரிப்பின் மூலமாக, இந்தியக் கரிம அளவு சுமார் 4.26 கோடி டன் அதிகரித்துள்ளது. வனப்பகுதி அதிகரித்துள்ள மாநிலங்களில் கர்நாடகா முதலிடம் பிடித்துள்ளது. ஆந்திரா, கேரளா, காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் வருகின்றன” என்றார்.