புருலியா, மேற்கு வங்கம்
குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு விவகாரத்தில் தம்முடன் கை கோர்க்குமாறு மக்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டங்கள் நாடெங்கும் தீவிரமாக நடந்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்களில் வன்முறை வெடித்ததால் பல பகுதிகளில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இந்த புதிய சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்.
கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்த திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை என அறிவித்துள்ளன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த சட்டத் திருத்தத்தை மசோதா வடிவில் இருந்தே தொடர்ந்து எதிர்த்து வருபவர் ஆவார். மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் ஒரு கூட்டத்தில் மம்தா பானர்ஜி உரையாற்றினார்.
அப்போது மம்தா, “பாஜகவுக்கு எதிராக மக்கள் அனைவரும் என்னுடன் கைகோர்த்து அக்கட்சியை நாடெங்கும் தனித்து விட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக அமைதியாக போராட்டம் நடத்துபவர்களும் கைது செய்யப்பட்டு தேச விரோதி எனக் கூறப்படுகிறார்கள்.
இந்த சட்டத்துக்கு எதிரான எனது போராட்டத்தில் இருந்து நான் பின் வாங்க மாட்டேன். உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை மட்டும் உறுதி செய்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். யாரும் நாட்டை விட்டு வெளியேறத் தேவை இருக்காது” எனக் கூறி உள்ளார்.