மீரட்
காவல்துறையினர் தங்களை பாகிஸ்தானுக்குச் செல்லச் சொல்வதால் தாங்கள் அச்சம் அடைந்துள்ளதாக மீரட் நகர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடெங்கும் போராட்டம் நிகழ்ந்து வருகிறது. இதில் ஒரு சில இடங்களில் வன்முறை நிகழ்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் அமைதியாக போராட்டம் நடத்துபவர்களையும் காவல்துறை கைது செய்து வழக்கு பதிந்து வருகிறது. இந்த நிலை உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிக அளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இம்மாநிலத்தில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினரின் மிரட்டல் அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் கடந்த வெள்ளிக்கிழையைன்று நடந்த போராட்டத்தில் நகர காவல்துறை சூப்பிரண்ட் எஸ் பி சிங் இடம் பெறும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் அவர் ”இங்கிருக்கும் கருப்பு மற்றும் மஞ்சள் பட்டி அணிந்தவர்களைப் பாகிஸ்தானுக்குச் செல்லச் சொல்லுங்கள். இங்கு சாப்பிட்டு விட்டு மற்றொரு இடத்தை புகழ வேண்டாம்” எனக் கூறுகிறார். இந்த வீடியோ மீரட் நகரில் உள்ள சாதிக் நகர்ப் பகுதியின் லாசரி கேட் என்னும் இடத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அங்கு வசிக்கும் மக்கள் இந்த போராட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் இடவில்லை என தெரிவிக்கின்றனர். பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர், ”காவல்துறையினர் இந்த போராட்டத்தில் பங்கேற்காத சிலரை இங்கு தேடி வந்தனர். அவர்கள் கிடைக்காததால் அதிகாரி இவ்வாறு எங்களை எச்சரித்தார். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் நாங்கள் மதியம் தொழுகையை முடித்து விட்டு மசூதியில் இருந்து வந்த போது அவர் எங்களை பார்த்ஹ்டு இவ்வாறு கூறினார்.
நாங்கள் அமைதியாகத் தொழுகை நடத்தி விட்டு வரும் போது காவல்துறையினர் இவ்வாறு எங்களை மிரட்டுவதால் நாங்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளோம். இது எங்கள் வீடு. இதை விட்டு நாங்கள் எங்கு செல்ல முடியும்? நாங்கள் யாருமே பாகிஸ்தான் ஆதரவாளர்கள் இல்லை. ஆயினும் காவல்துறை எங்களைப் பாகிஸ்தானுக்கு செல்லுமாறு மிரட்டுவது எங்களை அச்சத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். அந்த வீடியோ கடந்த 20 ஆம் தேதி எடுக்கப்பட்டது எனவும் அப்போது நடந்த போராட்டத்தில் அங்குள்ளவர்கள் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியதால் அதிகாரி அவ்வாறு கூறியதாகவும் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் தற்போது அங்குள்ள சூழல் அமைதியாக உள்ள நிலையில் பழைய வீடியோவை வேண்டும் என்றே சில விஷமிகள் வெளியிட்டு அமைதியைக் குலைக்க முற்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.