பிஜ்னோர்: உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்டத்தால் பாதிப்பில்லை என்று விளக்கிய பாஜக உறுப்பினருக்கு அடி, உதை விழுந்தது.
அம் மாநிலத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது. அங்குள்ள மக்களிடம் கஸ்மி என்ற பாஜக உறுப்பினர் குடியுரிமை சட்டம் பற்றியும், அதன் நலன்கள் பற்றியும் பொதுமக்களிடம் விளக்கிக் கூறினார்.
லகாடா மொஹல்லா என்ற பகுதியில் உள்ள கடைக்கு அவர் சென்றார். சிஏஏ, என்ஆர்சி இரண்டும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் உரிமைகளையும் குடியுரிமையையும் பறிக்காது, அவர்கள் சட்டத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதை தவிர்க்கவும் என்று அவர் கூறினார்.
அப்போது அங்கு இருந்தவர்களால் கஸ்மி சரமாரியாக தாக்கப்பட்டார். இது குறித்து அவர் கூறுகையில், சிஏஏ, என்ஆர்சி பற்றி முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்தேன். அப்போது ஒருவர் திடீரென்று என்னைத் தாக்கினார்.
எனது கழுத்தை நெரிக்க முயன்றார். நான் எப்படியோ தப்பித்தேன். போலீசில் புகார் அளித்துள்ளேன் என்றார். இது குறித்து பேசிய அம்ரோஹா காவல் துறை கண்காணிப்பாளர் விபின் தடா, ஒரு கடையில், ஒரு நபர் தன்னைத் தாக்கியதாக முர்தாஜா கஸ்மி குற்றம் சாட்டியுள்ளார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.