அகமதாபாத்:
நித்யானந்தா மீதான வழக்கில், அவ்ர வெளிநாட்டில் இருந்தால் இந்தியா கொண்டு வரத் தயார் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதே வேளையில், நித்தியானந்தா கடத்தி சென்றதாக சொல்லப்படும் பெண்கள் தாங்கள் விருப்பப்பட்டு சென்றதாக அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நித்தியானந்தா தனது இரண்டு மகள்களை சட்டவிரோதமாக ஆசிரமத்தில் அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் எனவும் நித்தியின் முன்னாள் சீடர் ஜனார்த்தன சர்மா ஆட்கொணர்வு மனுவை அகமதாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த, அகமதாபாத் உயர்நீதிமன்றம், ஜனார்த்தன மகள்கள் எங்கு உள்ளனர் என கேள்வி எழுப்பியது. இந்த நிலையில், சர்மாவின் மகள்கள் தத்துவ ப்ரியா மற்றும் நித்ய நந்திதா ஆகியோர் காணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, தாங்கள் மேற்கு இந்திய தீவுகளில் இருப்பதாகவும், தாங்கள் இந்தியா திரும்பினால் தங்களது தந்தையால் உயிருக்கு அபாயம் இருப்பதால், விருப்பப்பட்டே நித்யானந்தா வுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையின்போது உள்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நித்தியானந்தா வெளிநாடு சென்றிருந்தால் அவரை இந்தியா கொண்டு வர தயாராக இருப்பதாக தெரிவித்தது.
இதையடுத்து, வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்கள் எந்த நாட்டில் உள்ளார்களோ அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை எழுத்து மூலமாக அறிக்கையாக அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணையானது ஜனவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், ஆசிரம குழந்தைகளை துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்ட குஜராத் நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள் 2 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனு மீதான விசாரணை ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் என உத்தரவிட்டுள்ளது.