டெல்லி:
‘அரசியலமைப்பை காப்பாற்று, இந்தியாவை காப்பாற்று’ என்று மத்தியஅரசுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சியின் 135து நிறுவன நாளையொட்டியும் இன்று காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் கொடி அணிவகுப்பு நடத்தி வரும் நிலையில், அசாம் மாநிலம் கவுகாந்தியில் நடைபெறும் நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கலந்துகொள்கிறார்.
குடியுரிமை திருத்த சட்டம் உள்பட மத்தியஅரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடையே எடுத்துச் செல்லும் வகையில், இந்த கொடி அணிவகுப்பு நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் வேணு கோபால் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று காலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் நிறுவன நாளையொட்டி, சோனியாகாந்தி, காங்கிரஸ் கொடி ஏற்றி கொடி அணிவகுப்பை பேரணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி யில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ராகுல்காந்தி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் கொடி அணிவகுப்பு பேரணியை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அசாம் மாநிலம் கவுகாந்தியில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு பேரணியில் கலந்துகொள்ள ராகுல்காந்தி அசாம் சென்றுள்ளார். அங்கு நடைபெற உள்ள பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் ராகுல், பின்னர் CAA எதிராக நடைபெற்ற பேரணியின்போது, காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியான இரு சிறுவர்களின் குடும்பங்களை சந்திக்க உள்ளார்.
கவுஹாத்தி அருகே சாய்கானில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டின்போது கொல்லப்பட்ட 16 வயது சாம்ஸ் ஸ்டீபோர்ட் மற்றும் 17 வயது தீபஞ்சல் தாஸ் ஆகியோரின் குடும்பங்களையும் ராகுல் காந்தி சந்திக்கவும், இது அவரின் மனிதாபிமான கடமை என்று உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ராவத் கூறினார்.
“எங்கள் மதச்சார்பற்ற அரசியலமைப்பும் நமது கலாச்சார ஒற்றுமையும் இந்தியாவின் கருத்தை உருவாக்குகின்றன என்று நாங்கள் நம்புகிறோம். CAA எல்லாவற்றையும் நசுக்கி அழிக்கிறது” என்று ராவத் கூறினார்.