திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பெட்டிக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து அங்கு போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்று அகற்றினர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பரம்பாக்கத்தில் வாக்குச்சாவடிக்குள், இன்று மதியம் 12 மணி அளவில் திடீரென புகுந்த மர்மகும்பல்,வாக்குப்பெட்டிகளை எடுத்து கொண்டு வெளியே சென்று , அதற்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த வாக்குச்சாவடியில், மொத்தம் 1200 வாக்குகள் பதிவாக வேண்டிய நிலையில், நண்பகல் வரை 400 முதல் 500 வாக்குகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் மர்ம கும்பல் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து, மேசைகளை கவிழ்த்து போட்டும், ஆவணங்களை கிழித்து சேதப்படுத்தியும், வாக்குப்பெட்டிகளுக்குள் தீயை கொளுத்தி போட்டும் சென்றுள்ளனர்.
இதையடுத்து வாக்குச்சாவடிக்குள் நுழைந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்ய முயன்ற நிலையில், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டது. இதைத் தொடர்ந்து, பாப்பரம்பாக்கத்தில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
இதகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் விரைந்து வந்து வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தார். இதற்கிடையில், பாப்பரம்பாக்கத்தில் மறுவாக்குப் பதிவு நடத்தக்கோரி சிலர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக வேனில் ஏற்றி அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதுபோல, மணவாளன் நகரை அடுத்த ஒண்டிகுப்பம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில், பா.ம.க.வை சேர்ந்தவர் கள்ள ஓட்டு போட முயன்றதாகக் கூறப்படுகிறது. கள்ள ஓட்டு போட முற்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுகவினர் காவல்துறையினரிடம் முறையிட்டனர். இதை வலியுறுத்தி அவர்கள் ஒண்டிக்குப்பம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவிய நிலையில், காவல்துறையினர் தடியடி நடத்தி கட்சியினரை விரட்டியடித்தனர்.