வாரணாசி

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் 14 மாத பெண் குழந்தை தனிமையில் விடப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நாடெங்கும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்த போராட்டத்தை அடக்க பாஜக ஆளும் மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகள்  விதித்து வருகின்றன.   அவ்வகையில் பாஜக ஆட்சி செய்யும் உத்திரப்பிரதேச் மாநிலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.    அதில் புகழ்பெற்ற புண்ணிய தலமான வாரணாசி எனப்படும் காசி நகரும் ஒன்றாகும்.

வாரணாசி எனப்படும் காசி நகர் கடுமையாக மாசடைந்த இந்திய நகரங்களில் ஒன்று என்பதால் நாரில் மாசு ஏற்படுவதை தடுக்க ஒரு தன்னார்வு நிறுவனத்தை ஏக்தா மற்றும் அவர் கணவர் ரவிசேகர் ஆகியோர் நடத்தி வருகின்றனர்.   இவர்களுக்கு ஆர்யா என்னும் 14 மாத பெண் குழந்தை உள்ளது.   கடந்த வாரம் நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஏக்தா மற்றும் ரவிசேகர் கலந்துக் கொண்டுள்ளனர்.

தடையை மீறி போராட்டம் செய்ததாகக் கைது செய்யப்பட்ட பலரில் இவர்கள் இருவரும் உள்ளனர்.   இவர்களின் கைது காரணமாகக் குழந்தை ஆர்யா தாய் தந்தையின்றி தனிமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.   ரவிசேகரின் தாய் ஷீலா திவாரி தற்போது அந்த குழந்தையைக் கவனித்து வருகிறார்.   அந்தக் குழந்தை தாய் தந்தையரிடம் வளர்ந்ததால் பாட்டியிடம் உணவு உண்ணவும் மறுத்து வருகிறது.

இது குறித்து ரவிசேகரின் தாய், “என் மகன் அமைதியாகப் போராட்டம் நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.   அத்துடன் எனது மருமகளைக் கைக்குழந்தையின் தாய் எனவும் பாராமல் கைது செய்துள்ளனர்.   சிறு குழந்தை தாயில்லாமல் எப்படி இருக்கும்.   நான் அம்மா இதோ வந்து விடுவார், அப்பா வந்துக் கொண்டிருக்கிறார் எனக் கூறி சமாளிக்கிறேன்.

ஆனாலும் பாப்பா சரியாகச் சாப்பிடுவதில்லை.   எப்போதும் அம்மா வேண்டும் அப்பா வேண்டும் என அழுது வருகிறாள்.  எப்படி குழந்தையைச் சமாதானம் செய்வது என்பது தெரியவில்லை.    அவர்கள் இருவரையும் ஜாமினில் எடுக்கப் பல முயற்சிகள் செய்யப்பட்டும் ஜாமீன் கிடைக்காத நிலை உள்ளது.  இதனால் பச்சைக்குழந்தை தனிமையில் வாடுகிறது” எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.