திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு இடங்களில் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்து உள்ளார்.
தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்கள் செய்திருந்தவர்கள் அனைவரும் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளதால், அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, வேட்புமனு பரிசீலனை, வேட்புமனு வாபஸ் போன்றவை நடைபெற்று முடிவடைந்து, இறுதிப் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 2 இடங்களில், வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் திரும்ப பெறப்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் விஜய கார்த்திகேயன், திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவுக்கு தயாராக உள்ள வாக்குச்சீட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர், மாவட்டத்தில், 7 ஆயிரத்து 42 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், இவர்களில் 11 கிராம ஊராட்சித் தலைவர் 490 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 501 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இரண்டு இடங்களில் வேட்பாளர்கள் அனைவரும் தங்களது மனுக்களை திரும்பப் பெற்றதால் அப்பகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 1704 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளதாகவும், 13 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.