வாஷிங்டன்: காஷ்மீரில் மோடி அரசின் செயல்பாடு குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் விமர்சனம் செய்ததையொட்டி, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான சந்திப்பை ரத்துசெய்துள்ளார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.

இருநாட்டு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றுடனான சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட, 54 வயதான பிரமீளா ஜெயபால் என்பவர் அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் தற்போது உறுப்பினராக உள்ளார். இவர் காஷ்மீர் மனித உரிமை மீறல்கள் குறித்து விமர்சனம் செய்திருந்தார்.

இந்த விமர்சனம் இந்திய அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதேசமயம், அக்குழுவில் பிரமீளாவும் இடம்பெற்றிருந்தார் என்று தகவல்கள் தெரிவத்தன. இந்நிலையில், அக்குழுவுடனான தனது சந்திப்பை ரத்துசெய்வதாக அறிவித்துள்ளார் வெளியுறவு அமைச்சர்.