லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் மசோதா, பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் ஒருவழியாக நிறைவேறியது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதென்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், இந்த மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் நிறைவேறுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்துமுடிந்த அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியே மீண்டும் வென்றது. அக்கட்சி 363 இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தது.
இதன்மூலம், பிரெக்ஸிட் மசோதாவை நிறைவேற்றுவதில் இருந்துவந்த இழுபறி முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது. அந்த மசோதாவில் சில திருத்தங்களை செய்து அந்நாட்டின் வலிமை வாய்ந்த நாடாளுமன்ற கீழவையில் தாக்கல் செய்தார்.
மசோதாவுக்கு ஆதரவாக 358 வாக்குகளும், எதிர்த்து 234 வாக்குகளும் பதிவாகின. அடுத்தாண்டு ஜனவரியில் இந்த மசோதா மேலவையான பிரபுக்கள் அவைக்கும் அனுப்பி வைக்கப்படும். அங்கும் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஜனவரி 31ம் தேதி ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் முறைப்படி வெளியேறும் என்று கூறப்படுகிறது.