திருச்சூர்
திருச்சூரில் அரசு முதியோர் இல்லத்தில் வசிக்கும் ஒரு முதியவரும் மூதாட்டியும் திருமணம் செய்துக் கொள்ள உள்ளனர்.
கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள ராமவர்மபுரம் பகுதியில் ஒரு அரசு முதியோர் இல்லம் அமைந்துள்ளது. இங்கு ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட முதியோர்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒருவர் 66 வயதான பி வி லட்சுமி அம்மாள் ஆவார். இவர் கணவர் கிருஷ்ண ஐயர் திருச்சூரில் உணவு வழங்கும் தொழில் செய்து வந்தார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. கிருஷ்ண ஐயரிடம் உதவியாளராக கோச்சனியன் என்பவர் பணி புரிந்து வந்தார்.
கிருஷ்ண ஐயர் சுமார் 21 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவர் இறக்கும் போது தனது மனைவிக்கு யாரும் இல்லை எனவும் அவரை கவனித்துக் கொள்ளவேண்டும் எனவும் கோச்சனியனை கேட்டுக் கொண்டார். கணவரின் மரணத்துக்குப் பிறகு லட்சுமி அம்மாள் தனியாக வசித்து வந்தார். கோச்சனியன் அவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து உதவிகள் புரிவது வழக்கம். அதன் பிறகு லட்சுமி அம்மாள் தனது உறவினர் வீட்டுக்குச் சென்று தங்கி உள்ளார்.
அங்கும் நேரம் கிடைக்கும் போது வந்து கோச்சனியன் நலம் விசாரித்து வந்தார். அதன் பிறகு அவர் வருவது நின்று போனது. வயது முதிர்வால் லட்சுமி அம்மாள் ராமவர்மபுரம் அரசு முதியோர் இல்லத்தில் இணைந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு அதே முதியோர் இல்லத்தில் கோச்சனியன் சேர்ந்தார். இருவரும் ஒருவர் கதையை ஒருவர் பகிர்ந்துள்ளனர்.
கோச்சனியன் தனது மகன்களுடன் வாழ்ந்து வந்திருந்தார். அதன் பிறகு அவரை யாரும் கவனிக்காததால் வயநாட்டில் உள்ள அரசு முதியோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார். .அங்கிருந்து அவர் திருச்சூருக்கு மாற்றப்பட்டுள்ளார். இருவரும் தனித்து இருப்பதால் ஒருவருக்கொருவர் துணையாக திருமணம் செய்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்துள்ளனர்.
முதியோர் திருமணம் செய்துக் கொள்ள சட்டப்படி தடை இல்லை எனினும் இருவரும் அரசு முதியோர் இல்லத்தில் வசிப்பதாலும் திருமணத்துக்குப் பிறகும் இதே இல்லத்தில் தங்க உள்ளதாலும் விடுதி காப்பாளரிடம் அனுமதி கோரி உள்ளார். அவர் திருச்சூர் மாநகராட்சியின் சமுதாய நலப்பிரிவு அதிகாரியிடம் இது குறித்து யோசனை கேட்டுள்ளார்.
ஏற்கனவே அதிகாரிகள் கூட்டம் ஒன்றில் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்கள் விரும்பினால் திருமணம் செய்துக் கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் இந்த திருமணத்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருச்சூர் ராமவர்மபுரம் முதியோர் இல்லத்தில் 67 வயதான கோச்சனியன் மற்றும் 66 வயதான லட்சுமியின் திருமணம் அடுத்த வாரம் நடை பெற உள்ளது. இது முதியோர் இல்லத்தில் நடைபெறும் முதல் திருமணம் ஆகும்.