புதுடெல்லி: நரேந்திர மோடி அரசால் கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டங்கள் நாடெங்கும் பரவி வலுத்துவருவதால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டை பிளவுபடுத்தி, மக்களின் சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான சட்டம் என்று விமர்சிக்கப்படும் இந்த சட்டத்தை எதிர்த்து முதலில் அஸ்ஸாம் மற்றும் டெல்லியில்தான் பெரியளவில் போராட்டம் வெடித்தது.

பின்னர், நாடெங்கிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் அந்தப் போராட்டம் பரவியது. பல இடங்களில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் மற்றும் உயிர் பலிகள் நடைபெற்று வருகின்றன. பல மாநில முதல்வர்கள் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதல்வர்கள், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக உள்ளிட்ட பல மாநில எதிர்க்கட்சிகள் போன்றவை இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து, தங்கள் சார்பாக போராட்டங்களையும் முன்னெடுக்கின்றன.

ஆனாலும் இந்தச் சட்டத்திலிருந்து பின்வாங்கமாட்டோமென உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால் விடுத்து வருகிறார்.
பல இடங்களில் விமான சேவைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. எனவே, நிலைமை சமாளிக்கும் வகையில், புதுடெல்லியில் உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனையில் உள்துறை செயலர் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.