டில்லி
தனது குடும்பத்தினர் சுதந்திரத்தைக் காக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் செயலர் அஜய் மாக்கன் தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வலுத்து வருகிறது. போராட்டம் நடைபெற்ற டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பலகலைக்கழகத்தில் காவலர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மங்களூருவில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் மரணம் அடைந்துள்ளனர்.
டில்லி உள்ளிட்ட பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர் காங்கிரஸ் முன்னாள் செயலர் அஜய் மாக்கனின் குடும்பத்தினர் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்
இது குறித்து அவர் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
“எனது தாத்தா, கொள்ளுத்தாத்தா ஆகிய இருவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்பதால் பல முறை ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இன்று என் மனைவி, மகள் மற்றும் மகன் நமது சுதந்திரத்தைக் காக்கத் துணிவாகப் போராடியதைக் கண்டு நான் பெருமை அடைகிறேன்.
அவர்கள் காவல்துறையினரால் ஒரு பேருந்தில் அடைக்கப்பட்டுச் சென்ற போது இந்த அநீதியான ஆட்சியை எதிர்த்த ஒரு மன நிறைவை முகத்தில் காட்டியபடி அவர்கள் சென்றுள்ளனர்.”
என அஜய் மாக்கன் பதிந்துள்ளார்.