டில்லி
ஊரடங்கு உத்தரவால் அமைதியான போராட்டங்களை ஒடுக்குவது நாட்டின் ஆன்மாவை அவமதிப்பதாகும் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.
நாடெங்கும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதையொட்டி டில்லி, பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டில்லி நகரில் இணையம் மற்றும் மொபைல் சேவைகள், மெட்ரோ ரெயில் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன. அரசின் இந்த நடவடிக்கைக்குப் பல கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி அரசின் இந்த நடவடிக்கைகள் மக்களின் குரலை ஒடுக்கும் முயற்சி எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “இந்த அரசுக்குக் கல்லூரிகள், தொலைப்பேசிகள், இணையச் சேவைகள் உள்ளிட்டவற்றையும் மெட்ரோ ரெயிலையும் நிறுத்தவும் ஊரடங்கு சட்டம் அமல் படுத்தவும் எந்த உரிமையும் இல்லை. இதன் மூலம் அரசு இந்தியாவின் குரலை ஒடுக்கி அமைதியான போராட்டம் நடைபெற விடாமல் தடுக்கிறது. இது இந்தியாவின் ஆன்மாவுக்கு அவமானம் தரும் செயலாகும்” எனப் பதிந்துள்ளார்.