விழுப்புரம்:

மிழகத்தில் லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரத்தில் திருட்டுத்தனமாக  லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 47 பேர் அதிரடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

விழுந்தால் வீட்டுக்கு; விழலைன்னா நாட்டுக்கு’ என்கிற விளம்பரத்துடன் தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பல ஏழைக்குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த 2002-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் லாட்டரி டிக்கெட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

ஆனாலும், திருட்டுத்தனமாக லாட்டரி சீட்டுக்கள் விற்பனை தமிழகம் முழுவதும் அமோகமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து யாராவது புகார் கொடுத்தால் மட்டுமே காவல்துறையினர் நடவடிக்கை என்ற பெயரில், ஒப்புக்கு சப்பானியாக சிலரை  கைது செய்வதாக கூறி வருவதும் தொடர்ந்து வருகிறது.

கடந்த வாரம் விழுப்புரத்தில்,   தடைசெய்யப்பட்ட மூன்று நம்பர் ஆன்லைன் லாட்டரி மோகத்தால் கடனாளியான நகைத் தொழிலாளி அருண் என்பவர், தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் தடைசெய்யப்பட்ட ஆன் லைன் லாட்டரி விற்பனை செய்பவர் களை காவல்துறையினர் வேட்டையாடி வருகின்றனர்.

அருப்புக்கோட்டையில் தடைசெய்யப்பட்ட ஆன் லைன் லாட்டரி விற்பணை செய்த மூன்று நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் அதுபோல, சேலம், கிருஷ்ணகிரி, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

விழுப்புரம் காவல்துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில், மாவட்டத்தில் பிரபல மொத்த லாட்டரி சீட்டு வியாபாரி ஸ்ரீதர் உள்பட 47 லாட்டரி வியாபாரிகள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.