சென்னை:
குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு அளித்த பாஜகவின் கைக்கூலி, அ.தி.மு.க-வை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று, இன்று நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி. ஆவேசமாக கூறினார்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சேகர் பாபு தலைமையில் பா.ஜ.க அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், கலந்துகொண்டு பேசிய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மத்தியஅரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசியவர், நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு ஆகியவற்றை திசைத்திருப்பவே குடியுரிமை சட்டத் திருத்தத்தை பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
குடியுரிமை மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் அதிமுக, பாஜகவின் கைக்கூலியாக செயல்பட்டது, இதை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறியவர், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் சீக்கியர்கள், இந்துக்களை குடிமக்களாக ஏற்கும் மத்திய பா.ஜ.க அரசால், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள தமிழர்களை ஏன் குடிமக்களாக அங்கீகரிக்க முடியவில்லை என கேள்வி எழுப்பினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
இதுபோலவே அந்தந்த மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.