மதுரை:
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப்பகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டிடிவி தினகரனின் அமமுக மதுரையில் முதல் வெற்றியை பெற்றுள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தலில் அமமுகவுக்கு பொதுச்சின்னம் வழங்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து தேர்தல் அறிவிப்பு வெளியானது.
அதன்படி கடந்த 09-12-2019 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், நேற்றுடன் (16-12-2019) வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்தது. இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மதுரை மாவட்ட ஊராட்சி 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் A.C வசந்தகுமார் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.
அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.
மேலும், உள்ளாட்சி தேர்தலில் அமமுகவிற்கு பொதுச்சின்னம் வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுக்களை திரும்ப பெற டிசம்பர் 19ம் தேதி கடைசி நாளாகும்.
வாக்குப்பதிவு தேதிகள்: டிசம்பர் 27, 28
வாக்குகள் எண்ணிக்கை: ஜனவரி 2ம் தேதி
வெற்றிபெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு ஜனவரி 6ம் தேதி
TTV’s AMMK win Madurai Panchayat ward election