அசாம்:
அசாம் மாநிலத்தில் நாளை இரவு வரை இணையதள சேவை முடக்கம் தொடரும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாமில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரமாக அங்கு இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இன்று இணையதள சேவை மீண்டும் உயிர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேலும் 24 மணி நேரத்துங்ககு இணையதள சேவை முடக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
நடப்பு நாடாளுமன்ற தொடரில், மத்தியஅரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடந்த 9ந்தேதி (திங்கட்கிழமை) மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் கடந்த 11ந்தேதி தாக்கல் செய்து நிறைவேற்றியது. அப்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று குறிப்பிட்டார்.
இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக அசாமில் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு மக்களின் போராட்டம் வன்முறையாக உருவெடுத்து உள்ளது. இதையடுத்து, கவுகாத்தி உள்பட 10 மாவட்டங்களிலும் இணையதள சேவை கடந்த 9ந்தேதி முதல் துண்டிக்கப்பட்டுள்ளது.
அங்கு வன்முறை தொடர்ந்து வருவதால், இணையதள சேவை முடக்கத்தை மீண்டும்மீண்டும் மத்தியஅரசு நீடித்து வருகிறது. இன்றுடன் இணையதளசேவை முடக்கம் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேலும் 24 மணி நேரம் இணையதள சேவை முடக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.