டெல்லி: 9 மாதங்கள் ஆகியும் புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் இன்னும் குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்யவில்லை.
தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் பொறுபேற்றுக் கொண்டது.
கடும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இந்த தாக்குதல் குறித்த விசாரணைணை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ மேற்கொண்டு வருகிறது.
ஆனால் 9 மாதங்கள் கடந்தும் இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. முக்கிய சந்தேக நபர்களான முடாசிர் அகமது கான், சஜ்ஜட் பாட் ஆகியோர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
3வது நபரான அடில் அகமது தார் இதில் தற்கொலைப்படையின் சூத்ரதாரி. அவரும் இல்லை. இந் நிலையில் இது குறித்து முக்கிய உயரதிகாரிகள் கூறி இருப்பதாவது:
இந்த சதியில் யார் ஈடுபட்டனர் என்பது தெரியும். ஆனால் ஒவ்வொருவருக்கும் எந்தெந்த விதத்தில் தொடர் இருப்பது என்பதை கூற வேண்டும்.
அதன்பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, பாகிஸ்தானின் திட்டமிடலை வெளிச்சம் போட்டு காட்ட முடியும் என்றார். ஆனால் மற்றொரு அதிகாரியோ வேறு ஒரு கருத்தை முன் வைக்கிறார்.
பதான்கோட் சம்பவத்துக்கு பிறகு, 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டனர். அதன் பிறகு தான் ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசார் மற்றும் பாகிஸ்தானில் உள்ள மற்ற 3 பேரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது.
சம்பவம் நடந்த 90 நாட்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். ஆனால் சந்தேக நபர்கள் இறந்துவிட்டாலோ அல்லது கூடுதல் காலம் தேவையோ என்றாலோ நீட்டிக்கப்படும் என்று கூறினார்.