சென்னை:
தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில், ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது, கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்குவது குறித்து திமுக, அதிமுக தலைமை கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றன. ஏற்கனேவ, தேர்தலில் கூட்டணி கட்சியினருக்கு இடங்கள் ஒதுக்குவது குறித்த, அந்தந்த மாவட்டச் செயலாளர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று இரு கட்சிகளின் தலைமைகளும் அறிவித்து உள்ளன.
இந்த நிலையில், இன்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்றக் குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமி, முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு ஆகியோர் அண்ணா அறிவாலயம் வந்து திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை பதவிகளுக்கு, எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட் இருப்பதாக தெரிவித்தார்.
ஏற்கனவே, நேற்று மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக ஆலோசனை நடத்திய நிலையில், இன்று மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.