டெல்லி: அயோத்தி தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் நிலத்தில் ராமா் கோயில் கட்ட அனுமதி அளித்து கடந்த மாதம் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. தீா்ப்பில் திருப்தியில்லை என்று ஜாமியத் உலேமா ஏ ஹிந்த் என்ற அமைப்பு மறுஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தது.
சா்ச்சைக்குரிய இடத்தில் பாபா் மசூதியை மீண்டும் கட்ட உத்தரவிடுவதே உரிய நீதியாகும் என்று மனுவில் கோரியிருந்தது. இந்நிலையில், அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரிய ஆதரவில், 5 மறுஆய்வு மனுக்கள் தனித்தனியாக சிலநாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டன.
தீா்ப்பை எதிர்த்து, மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம் என்று சன்னி வக்பு வாரியம் ஏற்கெனவே அறிவித்துவிட்டது. ஆனால் அரசு அளிக்கும் 5 ஏக்கா் நிலத்தை ஏற்பதா, இல்லையா என்பது குறித்து ஒன்றும் கூறவில்லை.
இந்நிலையில் மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது நாளை விசாரணை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.