டெல்லி:
குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழர்களை சேர்க்காதது வருத்தம் அளிப்பதாகவும், ஆனால், மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்று, அதிமுக எம்பி எஸ்.ஆர் .பாலசுப்பிரமணியம் மாநிலங்களவையில் கூறினார்.
மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டதிருத்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்து பேசியபோது, தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது; இந்திய முஸ்லிம்களுக்கும் இந்த மசோதாவுக்கும் என்ன தொடர்பு? அவர்கள் எப்போதும் இந்திய குடிமக்களாகவே இருப்பார்கள் என்று உறுதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து மசோதா மீது விவாதங்கள் நடைபெற்று வருகிறது. கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை ஆவேசமாக பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக சார்பில், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் மசோதா தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது, இந்த மசோதா குறித்து த ங்களுக்கு சில கவலைகள் உள்ளன, ஆனால் ஒட்டு மொத்தமாக, இந்த மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம், மசோதாவில் இலங்கை தமிழர்களை சேர்க்காதது வருத்தம் அளிப்பதாகவும், இஸ்லாமியருக்கும் குடியுரிமை வழங்கும் வகையில் திருத்தம் தேவை என்றும் வலியுறுத்தினார்.