சென்னை
உச்சநீதிமன்ற தீர்ப்பு திமுகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி, திமுகதான் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்காமல் தடைகேட்கிறது என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு மாற்றியுள்ளது, தெம்பிருந்தால், திராணியிருந்தால் தேர்தலை அதிமுக சந்திக்கவேண்டும் என்று ஸ்டாலின் கூறி உள்ளார்.
தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்தலாம் என்று கூறி உள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ஜனநாயகத்தை காக்கக்கூடிய வகையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்திருக்கிறது. திமுக சார்பில் அதை வரவேற்கிறேன் என்று கூறினார்.
தொடர்ந்து, வழக்கு குறித்து விளக்கியவர், திமுகவைப்பொறுத்தவரையில் உள்ளாட்சித்தேர்தலை நிறுத்தக்கூடிய வகையில் நீதிமன்றத்தை நாடவில்லை; எதற்காக நாடினோம் என்றால் தொகுதி வரையறை சரியாக இல்லை. இட ஒதுக்கீடும் முறையாக இல்லை என்பது குறித்து 2016-ம் ஆண்டு முதலே நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம், அதற்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது..
ஜனநாயகத்தை காப்பாற்ற , உண்மையான உள்ளாட்சி அமைய இப்போதாவது உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசு அல்லது இந்த அரசோடு கூட்டணி வைத்திருக்கிற தேர்தல் ஆணையம் முறையான தேர்தலை நடத்தவேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் சக்தியை தெம்பிருந்தால், திராணியிருந்தால் முறையாக தேர்தல் நடத்தில் இந்த ஆட்சி சந்திக்கணும். திமுகவைப்பொறுத்தவரை துணிச்சலாக, தெளிவாக, துணிவாக இந்தத்தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறது. தற்போதுள்ள நிலையிலும் அரசின் முடிவால் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கத்தான் செய்கிறது”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன், “உச்சநீதிமன்ற தீர்ப்பு திமுக நிலைப்பாட்டிற்கு கிடைத்த வெற்றி என்று கூறி உள்ளார்.