டெல்லி:
மக்களவையில், நேற்று குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியுள்ள நிலையில், இந்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இன்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம், வடகிழக்கு மாநில மாணவர்களால் நடத்தப்படுகிறது.
பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியுரிமைசட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். ஏற்கனவே மோடி அரசு, கடந்த 2 016 ஆம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்த நிலையில், அது முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலையில், தற்போது மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
அதன்படி, பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத பாகு பாட்டால் வெளியேறி வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மை யினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் வகை செய்கிறது.
இந்த மசோதாவுக்கு மக்களவையில் நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மசோதா குறித்து பேசிய அமித்ஷா, குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்றும், மசோதாவில் பாகுபாடுகள் காட்டப்படவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார். இந்த மசோதாவால் 1.75 கோடி மக்கள் பயனடைவர். அதனால் இதனை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார். இதனையடுத்து மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
அசாம், அருணாசலப் பிரதேசம், மேகாலயம், நாகாலாந்து, மிஸோரம், மணிப்பூா், திரிபுரா ஆகிய மாநிலங்களைச் சோந்த மாணவா்கள் அமைப்புகள் இணைந்து இன்று 11 மணி நேரம் முழுஅடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இன்று அதிகாலை 5 மணி முதல் போராட்டம் நடந்து வருகிறது.
அசாம் மாநிலத்தில் உள்ளூர்வாசிகள் திப்ருகரில், ஜோராபாத்தில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாணவர் அமைப்பு (நேசோ) மற்றும் அனைத்து அசாம் மாணவர் சங்கம் (ஏஏஎஸ்யூ) 12 மணி நேர ‘பந்த்’ அழைப்பைத் தொடர்ந்து குவஹாத்தியில் கடைகள் மூடப்பட்டன.