டெல்லி:
சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்க உத்தரவிட முடியாது என்று டெல்லி உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் போலி செய்திகள், வதந்திகளை தடுக்கும் நோக்கில், பயனர்களின் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லி பாஜக தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாயா, டெல்லி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் இருக்கும் கணக்குகளில் 20 சதவிகிதம் போலியானவை என்றும், எனவே அவற்றை கண்டுபிடித்து நீக்க ஆதார், பான் எண்களை சமூக வலைதள கணக்குகளுடன் இணைக்க உத்தரவிட வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை தலைமை நீதிபதி படேல், நீதிபதி ஹரி சங்கர் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பில், சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று திட்டவட்ட மறுத்த நீதிபதிகள், சமூக வலைதள கணக்குகளுடன், ஆதார், பான் அல்லது பிற அடையாள ஆவணங்களை இணைக்க வேண்டும் என நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது என்றும், இதற்கான கொள்கைகளையும், சட்டத் திருத்தங்களையும் மத்திய அரசுதான் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், 20 சதவிகித போலி கணக்குகளை கண்டுபிடிப்பதற்காக உண்மையான கணக்குகளை வைத்திருக்கும் நபர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்த நீதிபதிகள், இவ்வாறு இணைத்தால், அனைத்து தகவல்களும் வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதால், இந்த விவகாரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்து உள்ளனர்.