பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பாதுகாப்பு உணர்வையும் காவல்துறையினர் ஏற்படுத்திட வேண்டும் என டிஜிபிக்கள் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
புனேவில் நடைபெற்ற டிஜிபிக்கள் மாநாடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலந்துக்கொண்டார். நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “அனைத்து தரப்புகளிலும் மக்களின் நம்பிக்கையை பெற்று, காவல்துறையினர் தங்களின் மீதான செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டியது அவசியம். குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். காவல்துறையினர், மக்களுடனான நட்புறவை மேம்படுத்த வேண்டும்.அனைத்து மாநில காவலர்களும், குறிப்பாக காஷ்மீர் மற்றும் உத்திர பிரதேச மாநில காவலர்கள், மத்திய துணை ராணுவப்படை ஆகியன நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க பாடுபட வேண்டும்.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட போதும், அயோத்தி தீர்ப்பு வெளியான போதும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டது போல, எப்போதும் பாதுகாப்பான நிலையை ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.