ஜலாலாபாத்
ஜப்பானில் இருந்து சென்று ஆப்கானிஸ்தான் மக்களுக்குச் சேவை செய்து வரும் மருத்துவர் டெசு நாக்கமுரா நேற்று முன் தின அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜப்பானைச் சேர்ந்த மருத்துவர் டெசு நாக்கமுரா கடந்த 1980களில் ஆப்கானிஸ்தானில் உள்ள தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வந்தார். அங்கு அவர் சிகிச்சை அளித்து வந்த போது அங்குள்ள மக்கள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டு துயருற்றார். அந்த மக்களின் உடனடித் தேவை நீர் தன் என மருத்துவர் அறிந்துக் கொண்டார்.
அதையொட்டி கடந்த 2000களில் அவர் பழைய ஜப்பானிய முறைப்படி நீர்ப்பாசன திட்டத்தைத் தொடங்கினார். மிகக் குறைந்த அளவே தொழில்நுட்பத் தேவை இருந்ததால் இந்த முறை அங்கு வரவேற்பைப் பெற்றது. இவருடைய நீர்ப்பாசன கால்வாய் மூலம் அங்கிருந்த லட்சக்கணக்கானோர் பயன் அடைந்தனர்.

இதனால் மக்கள் இவரை தங்கள் குடும்ப மனிதராகவே கருதி வந்தனர். நேற்று முன் தினம் இவர் ஜலாலாபாத் நகருக்குச் சென்றிருந்த போது அவரை 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அவர் உடன் பணி செய்த பாதுகாவலர், ஓட்டுநர் உள்ளிட்ட ஐவரும் கொல்லப்பட்டனர் படுகாயம் அடைந்த மருத்துவர் நாக்கமுரா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இந்த தகவல் ஆப்கானிஸ்தான் மக்களிடையே கடும் துயரை உண்டாக்கி உள்ளது. இந்த பகுதிக்கு நீர்ப்பாசன வசதி செய்ததன் மூலம் அவர் தங்களுக்கு வாழ்வு அளித்ததாகவும் அவ்வாறு வாழ்வை அளித்த மருத்துவர் மரணம் அடைந்ததால் தாங்கள் கடும் துயருற்றுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]