ஐயப்பனின் ஆறுபடை வீடுகள் பற்றி ஓர் சிறு கண்ணோட்டம்

ஐயப்பனின் ஆறுபடை வீடுகள் பற்றிய நெட்டிசன் கிருஷ்ணன் ஐயரின் முகநூல் பதிவு

தர்ம சாஸ்தா என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்றவர் தான் ஐயப்பன். இவரைப் பார்க்கச் செல்வதை ஆண்டுதோறும் எப்போது கார்த்திகை வரும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள். சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்யத் தவம் இருப்பார்கள். அதேபோல் அவருக்கு ஆறுபடை வீடுகள் உண்டு. அங்கும் நீங்கள் சென்ற வரலாம். ஐயப்பனின் முழு அனுக்கிரகமும் உங்களுக்குக் கிடைக்கும். அந்த ஆறுபடை வீடுகள் இதோ…

ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழா, எரிமேலி, பந்தளம், சபரிமலை.

ஆரியங்காவு

ஆரியங்காவு ஐயப்பன் கோவில் ஐயப்ப சுவாமியின் முக்கியத் திருத்தலங்களில் ஒன்று. இது கேரள மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆரியங்காவு என்னும் ஊரில் இருக்கிறது. பொதுவாக ஐயப்பன் என்றாலே நமக்குத் தெரிந்தவரையில் அவர் பிரம்மச்சாரி என்பது தான். ஆனால் ஆரியங்காவில் அவர் புஷ்கலை என்னும் மதுரையைச் சேர்ந்த சௌராஷ்டிர குலப்பெண்ணைத் திருமணம் செய்தபடி, துணையோடு காட்சி தருகிறார். மார்கழி மாதத்தில் தான் இந்த கோவிலில் ஐயப்ப சுவாி – புஷ்கலை தம்பதியினரின் திருமண வைபவ நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்படுகிறது. இந்த கோவிலில் ஐயப்பனுக்குக் காவல் தெய்வமாக, கருப்பசாமியும் கருப்பாயி அம்மனும் வீற்றிருக்கிறார்கள்.

அச்சன் கோவில்

இங்கு வீற்றிருக்கும் தெய்வத்தின் பெயர் அச்சன் கோவில் சாஸ்தா. இங்குள்ள சாஸ்தாவின் சிலையானது மிகவும் பழமையானது. இந்த கோவிலில் ஐயப்பன் அமர்ந்த கோலத்தில் கையில் அமுதத்துடனும் காந்த மலை வாளும் ஏந்திக்கொண்டிருக்கிறார்.இந்த ஐயப்பனின் இரண்டு புறத்திலும் பூரணா மற்றும் புஷ்கலை ஆகிய இருவரும் மலர் தூவிக் கொண்டிருப்பது போலக் காட்சியளிக்கிறார். இந்த சாஸ்தா கல்யாண சாஸ்தா என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவிலுக்குச் சென்று வழிபட்டால், திருமணத் தடைகள் ஏதேனும் இருந்தால் நீங்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இந்த கோவிலும் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் பத்தனாபுரம் பகுதிக்கு அருகில் தான் இருக்கிறது. சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களில் பலரும் இந்த அச்சன் கோவிலைத் தேடிச் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

குளத்துப்புழா

ஐயப்பன் கோவில்களில் மிக முக்கியத் தலமாகக் கருதப்படுவது இந் குளத்துப்புழை ஐயப்பன் கோவில். மற்ற ஐயப்பன் கோவிலுக்கு இல்லாத சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. அது என்னவென்றால், இந்த திருக்கோயிலில் ஐயப்பன் குழந்தை வடிவில் பாலசாஸ்தாவாகக் காட்சியளிக்கிறார். அதனாலேயே இந்த கோவிலுக்குள் இருக்கிற நுழைவாயில் பகுதிகள் சிறுவர்கள் சென்று வரும் அளவுக்குக் குறுகியதாகவே இருக்கிறது.இந்த கோவிலும் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் தான் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் செங்கோட்டையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் 50 கிலோ மீட்டர் தொலைவில் தான் இருக்கிறது. இந்த கோவிலில் உள்ள முக்கியமான சன்னதிகளுள் ஒன்று யட்சியம்மன் சன்னதி. குழந்தை இல்லாத பெண்கள் இந்த சன்னதியில் சென்று தொட்டில் கட்டி வழிபட்டால், குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.

எருமேலி

எருமேலி, எரிமேலி என இரண்டு விதமாக அழைக்கப்படுகிறது. கேரள மாவட்டம் கோட்டயம் பகுதியில் இருக்கிறது இந்த எருமேலி ஐயப்பன் கோவில். பொதுவாகச் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் அனைவரும் ஒன்று சேரும் இடமாக இந்த இடம் இருக்கிறது. பந்தள மன்னரான ராஜசேகர பாண்டியன் என்னும் மன்னனால் இந்த இடத்தில் கட்டப்பட்ட ஐயப்பன் கோவில் தான் இது. இந்த கோவிலில் வேட்டைக்குப் போகும் தர்ம சாஸ்தாவாக அம்பு மற்றும் வில்லுடன் காட்சி தருகிறார் ஐயப்பன். எருமைக்கொல்லி என்னும் பெயர் தான் காலப்போக்கில் எருமேலி என்று மருவியிருக்கிறது.

பந்தளம்

பந்தளம் என்பது கேரளாவில் உள்ள பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள நகர்ப்பகுதி. சபரிமலையில் குடிகொண்டிருக்கின்ற ஐயப்பன் மண்ணுலகில் பந்தள மகாராஜாவின் மகனாகப் பிறந்து வளர்ந்திருக்கிறார் என்ற நம்பப்படுகிறது. அதனாலேயே சபரிமலைக்குப் பக்தர்கள் வரும் காலங்களில் இந்த பந்தளத்தில் உள்ள வலியக்கோயிக்கல் என்னும் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இது அச்சன் கோவில் ஆற்றங்கரைக்கு அருகில் தான் இருக்கிறது. இந்த கோவிலின் சிறப்பே, மகரவிளக்கு நடக்கும் மூன்று நாட்களுக்கு முன்பாக ஐயப்பனின் புனித ஆபரணங்கள் அனைத்தும் திருவாபரணம் என்ற நிகழ்ச்சியின் பெயரில் பந்தளத்தில் இருந்து சபரிமலைக்குக் கொண்டு செல்லப்படும்.

சபரிமலை

சபரிமலையைப் பற்றி தனியே சொல்ல வேண்டிய தேவையே இல்லை. சபரிமலை பற்றியும் அங்கு வீற்றிருக்கும் ஐயப்பனின் ஆற்றல் மற்றும் அருளைப் பற்றியும் எல்லோருக்கும் தெரிந்தது தான். கேரளாவில் மேற்கு மலைத்தொடர் பகுதியில் உள்ள பத்தினம்தித்தா என்னும் மாவட்டத்தில் தான் சபரிமலை இருக்கிறது. மஹிசி என்னும் கொடிய அரக்கியைக் கொன்று, ஐயப்பன் தியானம் செய்யும் இடம் தான் இந்த சபரிமலை. பதினெட்டு மலைகளுக்கு இடையே தான் ஐயப்பன் கோவில் அமைந்திருந்திருக்கிறது. அதன் குறியீடு தான் பதினெட்டு படி. ஒவ்வொரு படியும் ஒரு மலை. ஒவ்வொரு ஆண்டும் கிட்டதட்ட 5 கோடி பேர் சபரிமலை ஐயப்பனைத் தரிசனம் செய்து வருகிறார்களாம்.கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து கடும் விரதம் மேற்கொள்வார். மண்டல பூஜையில் தொடங்கி, மகர விளக்கு வரை சிலர் இந்த விரதத்தைத் தொடர்ந்து இருந்து மலைக்குச் செல்வார்கள். இப்படி எல்லோராலும் பெரும் பக்தியுடனும் கொண்டாட்டத்துடனும் பார்க்கப்படுகின்றது ஐயப்பனுக்கும் ஆறுபடை வீடுகள் உண்டு. சபரிமலைக்குச் செல்பவர்கள் இங்கும் சென்று தரிசித்து வந்தால் ஐயப்பனின் முழுமையான அருளைப் பெற முடியும்.

ஸ்வாமியே  சரணம் ஐயப்பா!