காத்மண்டு: நேபாளத்தில் நடைபெற்றுவரும் தெற்காசிய விளையாட்டில், வாலிபால் போட்டிகளில், இந்தியாவின் ஆண், பெண் அணிகள் தங்கம் வென்று அசத்தின.
ஆண்கள் வாலிபால் பிரிவு இறுதிப்போட்டியில், இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதியது. இதில் முதல் செட்டில் மட்டுமே இந்திய அணி தோற்றது. ஆனால், பின்னர் சுதாரித்த இந்திய அணி, அடுத்துவந்த 3 செட்களையும் வென்று மொத்தத்தில் போட்டியை 3-1 என்ற கணக்கில் வென்று, தங்கத்தை தட்டிச் சென்றது.
பெண்கள் பிரிவில் இந்திய அணி நேபாளத்தை எதிர்கொண்டது. இந்தப் போட்டியின் முதல் 4 செட்களை இந்தியாவும் நோபளமும் மாறி மாறி கைப்பற்றின. இதனால், போட்டி ஐந்தாவது சுற்றுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால், ஐந்தாவது சுற்றில் இந்திய அணி 15-6 என்ற கணக்கில் வென்று தங்கம் தட்டியது. கால்பந்து போட்டியிலும் இந்தியப் பெண்கள் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளைப் பொறுத்தவரை, பெரிய நாடு என்பதால், எப்போதுமே இந்தியாதான் அதிகப் பதக்கங்களை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.