மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில், பாஜக ஆட்சி அமைக்க உதவினால், எனது மகளுக்கு மத்திய அமைச்சர் பதவித் தருவதாக பிரதமர் மோடி கூறியதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.

‘மகாராஷ்டிரா மாநிலத்தில் எநத்வொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில்,  பாஜக, சிவசேனா இடையே நீடித்து வந்த 30ஆண்டு கால உறவும், அதிகார மோதல் காரணமாக முறிந்தது. இதனால், அங்கு ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், தேசியாவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவை வசப்படுத்த பாஜகவும், சிவசேனாவும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இந்த பரபரப்பான சூழலில்தான், கடந்த மாதம் 20ந்தேதி (நவம்பர்) சரத்பவார் மோடி இடையே சந்திப்பு நடைபெற்றது.

முன்னதாக  நாடாளுமன்ற மேலவையின் 250 வது அமர்வு விழாவில் பேசிய மோடி, கண்ணியமுடன் நடப்பவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) உறுப்பினர்கள் என்று புகழ்ந்து கூறியிருந்தார். இந்த நிலையில்,மோடியை சரத்பவார் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், மோடியை சந்தித்த சரத்பவார், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று பிரதமரிடம் கோரியதாகவும், அரசியல் பேசவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது,  மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜகவுடன் கூட்டணி வைத்தால் மகள் சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாகவும், அதை நான் ஏற்க மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தனியார் டிவி ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள சரத்பவார்,  பாஜகவுடன் இணைந்து பணியாற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார் என்று கூறியவர்,  பாஜகவுடன் எனக்கு  தனிப்பட்ட நட்பு நல்ல முறையில் உள்ளது. அது அப்படியே இருக்க வேண்டும். ஆனால் பாஜகவுடன் இணைந்து பணியாற்றுவது முடியாத காரியம்.

எனது மகளும் புனே மாவட்டம் பாராமதியின் எம்பியுமான சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தருவதாக தெரிவித்தார். அதை நான் மறுத்துவிட்டேன் என்றார்.

சரத்பவாரின் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.