கொழும்பு
தற்போதுள்ள நிலையிலேயே அம்பந்தோட்டா துறைமுக மேம்பாட்டுப் பணிகள் தொடர இலங்கை ஒப்புக் கொண்டதால் மறு பேரம் தேவை இல்லை எனச் சீனா அறிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள அம்பந்தோட்டா துறைமுகத்தைச் சீன நிறுவனத்துக்கு 99 வருடக் குத்தகைக்கு அளிக்க இலங்கையின் முன்னாள் அதிபர் சிறிசேனா கடந்த 2017 ஆம் வருடம் ஒப்பந்தம் இட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த துறைமுகத்தைச் சீன அரசு தனது போர்க்கப்பல்களை நிறுத்த பயன்படுத்தும் என்பதால் இந்தியாவுக்குப் போர் அபாயம் உள்ளதாகக் கூறியது. அதைச் சீனா மறுத்தது.
சமீபத்தில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் கொத்தபாயா ராஜபக்சே வெற்றி பெற்று அதிபர் ஆனார். கடந்த மாதம் 29 ஆம் தேதி தனது இந்திய வருகையின் போது இலங்கை மக்கள் இந்த குத்தகை ஒப்பந்தத்தை விரும்பவில்லை என்பதால் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து மறு பேரம் நடத்த உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் சீனாவின் இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனாவும் இலங்கையும் ஏற்கனவே செய்துள்ள ஒப்பந்தத்தின்படி இப்போதுள்ள நிலையில் துறைமுகங்களில் மேம்பாட்டுப் பணிகளைத் தொடர இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இது கொழும்பு மற்றும் அம்பந்தோட்டா துறைமுகங்களுக்குப் பொருந்தும்.
தற்போதுள்ள நிலையின்படி மேம்பாட்டுக்கான புதிய வரைபடங்கள் தயார் செய்யாட்டு வருகின்றன அவை தயாரானதும் இலங்கை அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் தொடங்கௌளன. அத்துடன் துறைமுகத்தினுள் எந்த நாட்டுக் கப்பல்களை அனுமதிக்க வேண்டும் என்னும் முடிவை இலங்கை அரசு மட்டுமே எடுக்க முடியும். எனவே இந்த ஒப்பந்தத்தில் மறு பேரம் நடத்த எவ்வித தேவையும் இல்லை” என அறிவிக்கப்பட்டுள்ளது.