அடிலெய்டு: பாகிஸ்தான் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே வெற்றிப் பெற்றிருந்தது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில், டேவிட் வார்னர் முச்சதம் அடிக்க, 3 விக்கெட்டுக்கு 589 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி. பின்னர், ஆடவந்த பாகிஸ்தான் அணியால் முதல் இன்னிங்ஸில் எடுக்க முடிந்த ரன்கள் 302 மட்டுமே.
இதனால் அந்த அணி ஃபாலோ ஆன் பெற்றது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர விட்டது ஆஸ்திரேலியா. இரண்டாவது இன்னிங்ஸிலும் பாகிஸ்தான் அணியால் நினைத்தபடி சோபிக்க முடியவில்லை.
நாதன் லயன் மற்றும் ஹேசல்வுட் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய அந்த அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 300 ரன்களைக்கூட எட்ட முடியாமல், 239 ரன்களுக்கு நடையைக் கட்டியது.
இதன்மூலம், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்று, தொடரையும் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது டேவிட் வார்னருக்கு கிடைத்தது. நாதன் லயன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.