அகமதாபாத் :

குழந்தைகள் கடத்தல் வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள சுவாமி நித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமம் மூடப்பட்டு உள்ளது. அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிரடியாக வெளி யேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி உள்ள சுவாமி நித்தியானந்தா, ஈக்வடார் நாட்டில் உள்ள தீவில் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குழந்தைகள் கடத்தல் வழக்கில், அவரது குஜராத் ஆசிரம நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், தற்போது அவரது ஆசிரமத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் ஹிராபுர் பகுதியில் செயல்பட்டு வந்த நித்தியானந்தா ஆசிரமம் மீது ஏற்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து, விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம், ஆசிரமம் நடத்தப் பட்டு வந்த இடம், தனியார் பள்ளிக்கு சொந்தமான என கண்டறிந்தது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பள்ளி வளாகத்தில் ஆசிரமம் செயல்பட அனுமதி உள்ளதாக நித்தியானந்தா ஆசிரம் அளித்த சான்றிதழ் போலி என்பதும் உறுதி செய்யப்பட்டது.  இதனையடுத்து ஆசிரமம் செயல்படுவதற்கான உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டு, ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஆசிரமம் மூடப்பட்டது.

அகமதாபாத் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.