டில்லி
பாஜகவுக்குத் தேர்தல் பத்திரம் மூலம் நிதி வழங்கியதால் தனியார் செல்போன் நிறுவனங்களுக்குச் சலுகையா என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
பாஜகவுக்குத் தேர்தல் பத்தியம் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடிக்கு நன்கொடை கிடைத்துள்ளன. இவை அரசிடம் இருந்து ஆதாயம் பெற தனியார் நிறுவனங்களால் வழங்கப்பட்டிருக்கலாம் என காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சமீபத்தில் வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை கட்டணம் செலுத்துவதில் பாஜக அரசு சலுகை அறிவித்தது.
அதே வேளையில் அந்த நிறுவனங்கள் தங்கள் சேவைக் கட்டண உயர்வை நேற்று அறிவித்துள்ளது. நேற்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் போன்றவை காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 7 ஆயிரம் கோடிக்கு அதிகமாக லாபம் ஈட்டின.
கடந்த 5 ஆண்டுகளில் அந்த நிறுவனங்கள் 11 ஆயிரம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளன. தற்போதைய மத்திய பாஜக அரசு வேண்டும் என்றே பொதுத்துறை நிறுவனங்களை அழிக்கிறது. நன்கு லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் லாபத்தைக் குறைக்க மத்திய அரசு முயன்று அதில் தோல்வியடைந்தால் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு லாபம் ஈட்டி வந்த பொதுத்துறை நிறுவனங்களை அழித்து விட்டு, தனியார் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்க மத்திய அரசு முயல்வது ஏன்? பாஜக தேர்தல் பத்திரம் மூலம் பல்லாயிரம் கோடிக்கு ஆதாயம் அடைந்ததற்கு நன்றிக்கடனாக மத்திய அரசு இதைச் செய்கிறதா? எனப் பிரதமர் மோடியைக் கேட்க விரும்புகிறேன்” எனக் கேள்விகள் எழுப்பி உள்ளார்.