டில்லி
பாஜகவினரை விமர்சித்தால் தாக்கப்படுவதாக மத்திய அமைச்சர் அம்த்ஷ முன்பு தொழிலதிபர் ராகுல் பஜாஜ் தெரிவித்தது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
சமீபத்தில் டில்லியில் பஜாஜ் நிறுவனம் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து இருந்தது. இதில் மத்திய அமைச்சர்கள், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, குமார் மங்கலம் பிர்லா, சுனில் பாரதி மிட்டல் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இதில் பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ் உரையாற்றினார். அவருடைய வெளிப்படையான உரையால் கடும் பரபரப்பு உண்டாகி உள்ளது.
ராகுல் பஜாஜ் தனது உரையில், “காங்கிரஸ் கட்சித் தலைமையிலான முந்தைய அரசின் தவறுகளை நாங்கள் முன்பு பயமின்றி விமர்சித்தோம். இப்போது பாஜகவினரை விமர்சித்தால் நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாவோமோ என்கிற ஒரு பயம் நிறைந்த சூழ்நிலை உள்ளது. அந்த அளவுக்கு பாஜக விமர்சனத்தை வெறுக்கிறது. நிறுவனங்களுக்கு மத்திய அரசை விமர்சிக்கத் தைரியம் இல்லை.
இதை எங்களைப் போன்ற தொழிலதிபர் யாரும் சொல்ல மாட்டார்கள் ஆனால் நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். இதை மாற்றி ஒரு நல்ல சூழலை உருவாக்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் அரசு இரண்டாவது முறையாக ஆட்சியில் இருந்தபோது, நாங்கள் யாரையும் விமர்சிக்க முடியும் எனும் நிலைமை இப்போது இல்லை. உங்களை நாங்கள் வெளிப்படையாக ஆதரித்தால் நீங்கள் பாராட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கே இல்லை.” எனத் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘எங்களைக் கண்டு யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆயினும் ஒரு குறிப்பிட்ட வகையில், சிக்கலைச் சரிசெய்ய நாங்கள் முயற்சி செய்ய வேண்டி உள்ளது. நமது பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராகப் பல செய்தித்தாள்கள் மற்றும் கட்டுரையாளர்கள், ஜிடிபி சரிவு குறித்துத் தொடர்ந்து எழுதுகிறார்கள்.
இந்த ஆட்சிக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவர்கள் யாரும் பயமுறுத்தப்படவில்லை. அவ்வாறு பயமுறுத்துவதை இந்த அரசும் விரும்பவில்லை. இந்த அரசாங்கம் மிகவும் வெளிப்படையான முறையில் செயல்படுவதால் எந்தவிதமான எதிர்ப்பையும் பற்றியும் எங்களுக்குப் பயமில்லை’’ எனப் பதிலளித்துள்ளார்.