புதுடெல்லி: அயோத்தி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் மத்திய சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி.

ஜாமியத் உலெமா இ ஹிந்து மற்றும் முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் ஆகிய முஸ்லீம் அமைப்புகள் சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாய் அறிவித்துள்ளன.

இதனையடுத்தே தனது எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளார் பாரதீய ஜனதாவின் முஸ்லீம் முகங்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான முக்தர் அப்பாஸ் நக்வி.

“உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இப்போது அதற்கு எதிராக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்வதன் மூலமாக, நாட்டில் பிரிவினையும் மோதலும் உருவாகும். நீதிமன்றத்தை நாடுவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது என்றாலும், நூற்றாண்டுகாலப் பிரச்சினைக்கு அனைவரும் ஏற்கும் வகையில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்ப்பது தேவையற்றது.

ஒற்றுமையை பலப்படுத்துகிறது இந்தத் தீர்ப்பு. தனிப்பட்ட சிலரின் கருத்துக்கள் சமூகத்தின் கருத்தாகிவிடாது. அவர்கள் எதற்காக நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சமரசம் செய்துகொள்ளும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை? என்றுள்ளார் அமைச்சர்.