மும்பை: நடைபெற்று முடிந்த பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்தில், லோதா கமிட்டி விதிமுறைகளில் மாற்றம் செய்து, அதை உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அதை ஏற்றால், தற்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலி, வரும் 2024ம் ஆண்டு வரை அப்பதவியில் நீடிக்க முடியும்.
தற்போதைய பிசிசிஐ விதிமுறைகளின்படி, ஒருவர் மாநில கிரிக்கெட் சங்கம் அல்லது பிசிசிஐ ஆகியவைகளில் மொத்தமாக சேர்த்து 6 ஆண்டுகள் மட்டுமே பதவி வகிக்க முடியும்.
ஏற்கனவே மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தில் கங்குலி 5 ஆண்டுகள் தலைவர் பதவியை வகித்துவிட்டதால், தற்போது அவர் பிசிசிஐ தலைவராக 10 மாதங்கள் மட்டுமே இருக்க முடியும் என்ற நிலை. இந்த சிக்கல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவிற்கும் உண்டு. இவர் தற்போது பிசிசிஐ செயலாளர்.
எனவே, மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் பிசிசிஐ ஆகியவற்றில் தனித்தனியாக தலா 6 ஆண்டுகள் பதவி வகிக்கும் வகையில், விதிமுறைகளைத் திருத்தவும், அதற்கு உச்சநீதிமன்ற அனுமதியைப் பெறவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்தால், வரும் 2024ம் ஆண்டுவரை கங்குலி பிசிசிஐ தலைவராகவும், ஜெய்ஷா பிசிசிஐ செயலாளராகவும் பதவியில் இருப்பார்கள்.