பெங்களூரு: தூக்கம் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் ஒரு கர்நாடக நிறுவனம், நன்றாக உறங்கும் நபர்களுக்கு ரூ.1 லட்சம் ஊதியம் தருவதற்கு தயாராக உள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ‘வேக்பிட் டன்னோவேஷன்’ என்று நிறுவனம், மனித உறக்கம் மற்றும் அதனால் ஏற்படும் உடல்நிலை மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. எனவே, இந்த ஆய்வை வெற்றிகரமாக செய்துமுடிக்கும் வகையில், நன்றாக தூங்கும் நபர்களைத் தேடி வருகிறது.
சுமார் 100 நாட்களுக்கு, தினமும் சுமார் 9 மணிநேரங்கள் உறங்க வேண்டுமாம். இதற்காக தனியான ஒரு மெத்தையையும் தயாரித்துள்ளது அந்நிறுவனம். தூங்குவோர் அந்த மெத்தையைத்தான் பயன்படுத்த வேண்டும்.
தூக்கத்தின் மீது அதிக விருப்பம் கொண்டவர்கள் மற்றும் சிறிய இடைவெளி கிடைத்தாலே உடனே தூங்கி விடுவோருக்கு இந்த நிறுவனம் முன்னுரிமை கொடுக்கும். இந்த நிறுவனத்தின் மெத்தையில் உறங்கச் செல்வோர் பைஜாமா உடை மட்டுமே அணிய வேண்டுமாம்!
ஆய்வு நடக்கும் 100 நாட்களில் சம்பந்தப்பட்ட ‘தூங்குமூஞ்சிகள்’ மடிக்கணினிப் பயன்படுத்தக் கூடாதாம். மற்றபடி, இதர அலுவலக வேலையை மேற்கொள்வதில் பிரச்சினை இல்லையாம்.
படுத்து உறங்குவதற்கு முன்னும் பின்னும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.
இந்த ஆய்வில் 100 நாட்கள் வெற்றிகரமாக ஈடுபடுவோருக்கு ரூ.1 லட்சம் ஊதியமாக வழங்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.