பாங்க்காக்: இந்தியாவின் வில்வித்தை வீராங்கனை மிக முக்கியப் போட்டியில் தங்கத்தைத் தனதாக்கியதோடு ஒலிம்பிக் கோட்டாவையும் வென்றார்.
ஆசிய அளவில் வில்வித்தைக்கான 21 வது சாம்பியன்ஷிப் போட்டியானது தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் நடைபெற்றது. இதில் ஒரு அங்கமாக ஆசிய மண்டலத்துக்கான ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியுமாக அது இருந்தது.
இதில் நேற்று நடந்த பெண்களுக்கான ரிகர்வ் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் தீபிகா குமாரி, அங்கிதா பகத் ஆகியோர் மோதினார்கள்.
இதில் தொடக்கத்திலுருந்தே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய தீபிகா குமாரி 6-0 என்ற கணக்கில் சக வீராங்கனை அங்கிதா பகத்தை எளிதில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அங்கிதா பகத் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
முன்னதாக நடந்த அரைஇறுதிப் போட்டியில் தீபிகா குமாரி 6-2 என்ற கணக்கில் வியட்நாம் வீராங்கனை நுயெத் டு தி அன்க்கையும், அங்கிதா பகத் 6-2 என்ற கணக்கில் பூடான் வீராங்கனை கர்மாவையும் வீழ்த்தினார்கள்.
அரைஇறுதிக்கு முன்னேறியதன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா ஒரு கோட்டாவை உறுதி செய்தது.
பூடான் வீராங்கனை கர்மா, வியட்நாம் வீராங்கனை நுயெத் டு தி அன்க் ஆகியோரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற பூடான் நாட்டை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை கர்மா பெற்றார்.
தீபிகா குமாரி ஏற்கனவே பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான வில்வித்தை விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் பிறந்தார்.
இவர் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் பிரிவிலும் குழுவாகவும் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் இவர் விற்கலையில் உலக அளவில் முதல் இடத்தில் இருந்தார்.
தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான தீபிகா குமாரி அளித்த பேட்டியில், ‘நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினோம். ஆனால் ஆரம்பத்தில் சற்று பதற்றம் அடைந்து விட்டோம். காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இருப்பினும் நாங்கள் இன்னும் ஒரு ஒலிம்பிக் கோட்டாவை வெல்ல வேண்டும்.
ஒரு ஒலிம்பிக் கோட்டாவையாவது உறுதி செய்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். அடுத்த ஆண்டு பெர்லினில் நடைபெறும் உலக கோப்பை வில்வித்தை போட்டியின் மூலம் அணிக்கான ஒலிம்பிக் வாய்ப்பை பெறுவோம் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.