லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மதிய உணவு திட்டத்தில் ஒரு லிட்டரை பாலை, ஒரு வாளி தண்ணீர் கலந்து மாணவர்களுக்கு வினியோகித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதே மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய முன்னேறாத மாவட்டமாக அறியப்படுவது சோன் பத்ரா என்ற மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் உள்ள சோபான் என்ற இடத்தில் அரசு ஆரம்ப பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
அந்த பள்ளியில் அரசின் மதிய உணவு திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு பால் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், குறைந்த அளவே பால் வினியோகிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், பள்ளி மாணவர்கள் 81 பேருக்கு பால் வினியோகிக்கப்பட்டது. அதுவும் எப்படி…! ஒரு லிட்டர் பாலில் ஒரு வாளி தண்ணீர் கலந்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அதை அங்குள்ள கிராம பஞ்சாயத்து பிரமுகர் வீடியோ எடுத்து இணைய தளத்தில் உலவவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி இருக்கிறது. இதையடுத்து, அந்த குறிப்பிட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.
பால் இருப்பில் வைக்காமல் கவனக்குறைவாக இருந்த, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி முகேஷ் குமார் கூறி இருப்பதாவது:
இது தொடர்பாக நான் விசாரணை நடத்தினேன். பாக்கெட் பால் தான் வழக்கமாக பயன்படுத்தப்படுவது வழக்கம். போதிய பால் சம்பவம் நிகழ்ந்த அன்று பள்ளியில் இருந்திருக்கிறது.
ஆனால் முதல் தடவை இந்த தவறு நிகழ்ந்திருக்கிறது. உடனடியாக அது சரி செய்யப்பட்டுவிட்டது என்றார். சமையல்காரரின் விளக்கமோ வேறாக இருக்கிறது.
இது குறித்து பேசிய சமையல்காரர் பூல்வந்தி, என்னிடம் ஒரு பாக்கெட் கொடுத்து தான் பால் வினியோகிக்க சொல்கின்றனர். அதனால் தான் ஒரு வாளி தண்ணீரில் கலந்து கொடுத்தேன். வேறு என்ன செய்வது? என்றார்.