சென்னை:

தைப்பொங்கலை முன்னிட்டு, ரேசன்கார்டு தாரர்களுக்கு ரூ.1000 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று பயனாளர்களுக்கு பொங்கல்பரிசு தொகுப்பை  தொடங்கி வைக்கிறார்.

அரிசி  ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக கடந்தை ஆண்டைப்போல, இந்த ஆண்டும்  ரூ.1000 உடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு  வழங்கப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, அதற்கான நிதியாக ரூ.2,363 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில்,  இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.   ரூ.1000 உடன்,  பொங்கல் தொகுப்பாக1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை, 2 அடி துண்டு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும்.

இந்த பரிசு தொகுப்பு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும்,  சர்க்கரை மற்றும் இதர கார்டுதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பு கிடைக்காது என்ற கூறப்படுகிறது.

இன்று தலைமைச்செயலகத்தில் இந்த திட்டத்தை  முதலமைச்சர் பழனிசாமி   தொடங்கி வைத்தவுடன் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.