டெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
நீண்ட முயற்சிக்கு பிறகு, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி வருகிறது. அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி இருக்கிறது.
அதிமுக, திமுக ஆகிய கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க காத்திருக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு, மேயர், நகராட்சி மற்றும் ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.
அதற்கான அவசர சட்டத்தையும் தமிழக அரசு, அரசிதழில் வெளியிட்டது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக புதிய மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறது.
வார்டு மறுவரையறை பணிகள்,இட ஒதுக்கீடு, சுழற்சி முறை ஆகிய பணிகளை முடிக்காமல் உள்ளாட்சித் தேர்தல் பட்டியலை வெளியிடவும், தேர்தலை நடத்த தடையும் விதிக்க வேண்டும் என்று மனுவில் திமுக கூறி இருக்கிறது.
ஏற்கனவே இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பு வரவில்லை. இத்தகைய நிலையில் திமுக மனு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.