ஐதராபாத்: தெலுங்கானாவில் போராட்டத்தை கைவிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதாக முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தீவிர போராட்டத்தில் குதித்தனர். தீவிரமடைந்த அவர்களது போராட்டம் 52 நாட்கள் நடந்தது.
போராட்டத்தை திரும்ப பெற்று பணிக்கு திரும்புமாறு, தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு வெளியிட்டது. அதை ஏற்று, போக்குவரத்து தொழிலாளர்களும் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.
பின்னர், போக்குவரத்து பணிமனைகளில் வேலையில் சேருவதற்காக சென்றனர். ஆனால், அவர்களை வேலையில் சேர்த்துக் கொள்ள நிர்வாகம் மறுத்தது. அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் கதறி அழுதனர்.
ஆனால், அவர்களை பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் கைது செய்தனர். இந் நிலையில், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் மீண்டும் பணியில் சேரலாம். அவர்களுக்கு எந்தவிதமான நிபந்தனைகளும் விதிக்கப்பட மாட்டாது. பணிக்கு திரும்பலாம் என்று சந்திர சேகர் ராவ் கூறி உள்ளார்.