டோக்கியோ

ப்பானிய நிறுவனம் ஒன்று புகை பிடிக்காதோருக்கு வருடத்துக்கு ஆறு நாட்கள் அதிக விடுமுறை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

ஜப்பானில் புகை பிடிக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது.   உழைப்புக்குப் பெயர் போன ஜப்பான் ஊழியர்களில் பலர் புகைபிடிக்க நேரம் எடுத்துக் கொள்வதால் பணி நேரம் குறைவதாகக் கூறப்படுகிறது.   இதனால் புகை பிடிக்காத ஊழியர்கள் தாங்கள் அதிக நேரம் பணி புரிவதாகவும் புகை பிடிப்போர் குறைந்த நேரம் பணி புரிவதாகவும் தெரிவித்து வந்தனர்.

இதையொட்டி ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில்  உள்ள புகழ்பெற்ற நிறுவனமான பியாலா நிறுவனம்  ஒரு கணக்கெடுப்பை நிகழ்த்தியது.   இந்த நிறுவன அலுவலகம் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 29 ஆம் மாடியில் இருந்தது.   ஆனால் அங்கு புகைபிடிக்க அனுமதி இல்லை.  அதற்கான இடம் கீழே கட்டிடத்தின் அடித்தளத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

எனவே புகை பிடிப்போர் அங்கு சென்று புகை பிடித்துவிட்டு வர ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் ஆனது தெரிய வந்தது.    இந்த நேரத்தை மிச்சம் செய்ய நிறுவனம் முடிவு செய்தது.   அத்துடன் ஊழியர்கள் புகைப்பிடிப்பதால் அவர்கள் உடல் நலம் கெடுவதை நிறுத்தவும் முடிவு செய்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி நிறுவனம் புகை பிடிக்காத ஊழியர்கள் அதிக நேரம் பணி புரிவதால் அவர்களுக்கு வருடத்துக்கு 6 நாட்கள் அதிக விடுமுறை அளிக்க உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கபட்டுள்ள்து.  இந்த அறிவிப்பின் மூலம் அந்த நிறுவனத்தில் பணி புரியும் 1200 ஊழியர்களில் 300 பேர்கள் வரை பயனடைய உள்ளனர்.

அத்துடன் இந்த சலுகை காரணமாக மேலும் சிலர்  புகை பிடிப்பதை நிறுத்தலாம் எனவும் நிறுவன தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.