டெல்லி:

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,  மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் அவலங்களை கடுமையாக சாடி டிவிட் பதிவிட்டு உள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 99 நாட்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இவரை சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தன்னை சந்தித்த குடும்ப உறுப்பினர்களிடம் கூறி, மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக நடத்திய அரசியல் அவலங்கள் குறித்தும், அரசியல் நிலைமை குறித்தும்  டிவிட் போட்டுள்ளார்.

அதில், நாடு முழுவதும் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் 23 முதல் 2019 நவம்பர் 26 வரை நடைபெற்ற நிகழ்வுகள் அரசியலமைப்பை மிக மோசமாக மீறிய செயல் என்று காட்டமாக தெரிவித்து உள்ளார்.

அங்கு பாஜக ஆட்சி அமைக்கும் வகையில்,  ஜனாதிபதியின் ஆட்சியை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட அதிகாலை 4.00 மணிக்கு குடியரசுத் தலைவரை, எழுப்பியது, ராஸ்டிரபதி அலுவலகத்தில் நடந்த தாக்குதல் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், காலை 9.00 மணி வரை ஏன் காத்திருக்க முடியாது? என்றும் கேள்வி விடுத்துள்ளார்.

பாராளுமன்ற ஜனநாயகத்தின் பரிணாமத்தை கண்காணித்து வரும் மக்கள், சிக்கலான, மாறுபட்ட, பன்முக  கூட்டணிகளால் சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றன என்பதை ஒப்புக்கொள்வார்கள் என்றும், அவை பொதுவான குறைந்தபட்ச திட்டத்தில் சமரசம் செய்து உடன்பட கற்றுக்கொள்கின்றன என்றும் தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உள்ள  சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்திற்கு அன்பான வாழ்த்துக்கள் என்று, வாழ்த்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், உங்களது தனிப்பட்ட கட்சி நலன்களுக்கு அடி பணியாமல், விவசாயிகளின் நலன், முதலீடு, வேலைவாய்ப்பு, சமூக நீதி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் ஆகிய  பொதுவான நலன்களை செயல்படுத்த ஒன்றிணைந்து செயற்படுங்கள்.

இவ்வாறு டிவிட் பதிவிட்டுள்ளார்.