சென்னை: இந்தியக் கடல்சார் பல்கலையின் மாணாக்கர் சேர்க்கை விதிகளில் மாற்றம் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கூறப்படுவதாவது; சென்னை செம்மஞ்சேரியில் செயல்பட்டு வருகிறது இந்திய கடல்சார் பல்கலை. இதன்கீழ், மும்பை, கொல்கத்தா, கொச்சின், விசாகப்பட்டணம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் கடல்சார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலையில், இப்பல்கலை சார்பில் தனியாக நடத்தப்படும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணாக்கர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஆண்டுதோறும் பல்லாயிரம் மாணாக்கர்கள் பங்கேற்றாலும், மாணாக்கர் சேர்க்கையை இன்னும் அதிகரிக்கும் பொருட்டும், ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு அவர்கள் காட்டும் ஆர்வத்தைப் போன்று, கடல்சார் பல்கலையிலும் சேர்வதற்கான ஆர்வத்தைக் காட்டும் வகையிலும், ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும் சேர்த்துக்கொள்ளும் நடைமுறை குறித்து பரிசீலிக்கப்படுமென கூறப்படுகிறது.

இதனடிப்படையில், கடல்சார் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வு மற்றும் ஜேஇஇ ஆகிய தேர்வுகளில் இரண்டில் ஒன்றில் தேர்ச்சி பெற்றாலே இப்பல்கலையில் சேரலாம். இதன்மூலம் மாணாக்கர் பங்களிப்பை அதிகரிக்க முடியும்.

மேலும், இப்பல்கலை வழங்கும் டிப்ளமோ படிப்பிற்கு பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் சேர்க்கை வழங்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.